Monday, April 23, 2012

விடுமுறை விடப்போறாங்க ..

பள்ளி ஆண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை விடப்போறாங்க .. பயலுவளுக்கெல்லாம் ஒரே குஷி ! இந்த வாட்டி பாட்டி வீட்டுக்கு வேணாம், அத்த வீட்டுக்கு போலாம்பா, அங்க நெறைய மரம் இருக்கும் ஏரி இருக்கும் அதில நெறைய மீன் இருக்கும் அத்த அவங்க பாவடைய இடுப்பில கட்டிக்கிட்டு பலூன் போல மேதப்பங்க, அப்படியே என்னையும் முதுகுல தூக்கிகிட்டு ஏரியோட கொஞ்ச தூரம் போவாங்க, காலையில பாட்டி எதிர் வீட்டுல ஆப்பம் பால் வாங்கியாந்து தருவாங்க .. நானும் தம்பியும் நல்ல ஓடி பிடிச்சு வெளையாடுவோம் ! போலாம்பா ....போலாம்பா... என்று அப்பாவிடம் கெஞ்சிய காலமெல்லாம் மலையேறி போயிடுச்சிங்க...

அப்படியே அப்பா சரி என்று சொல்லிவிட்டால் போதும், அன்னக்கி ராத்திரி தூக்கமே வராது... ராத்திரியில எழுந்து எழுந்து அலாரத்தை பாத்துட்டு மறுபடியும் படுக்கிறது ...இப்படியே ராத்திரி பூரா நேரத்த முழுங்கிட்டு காலையில எல்லாருக்கும் முன்னாடியே எழுந்து குளிச்சிட்டு தயாராயிட்டு .. அப்பா அம்மா எப்போ கேளம்புவாங்க ன்னு குட்டி போட்ட பூனை போல அங்கேயும் இங்கேயும் ஓடி நடந்து அல்லாடுவாங்க ....

சரி எல்லாம் கெளம்பி அந்த காலையில மொத பேருந்த புடிச்சு போயி அப்பறம் இன்னொரு பேருந்த புடிச்சு, அந்த பேருந்து என்னடான்னா ஒரு நாளைக்கு மூணு முறை தான் வரும் போகும், அந்த டென்ஷன் எல்லாம் தாண்டி ஒரு வழியா கிராமத்துக்கு போனா அங்க பேருந்து நிக்கற இடத்திலேயே பாட்டி அத்த மாமா எல்லாம் ரெடியா நிப்பாங்க, பசங்க படிகட்டுல கடைசி படிக்காட்டுல கால வக்கிரத்துக்கு முன்னாடியே அத்த அப்படியே அலேக்க தூக்கிடுவாங்க அப்புறம்  அங்க இருந்து கெளம்பற வரைக்கும் ஒரு கொண்டாட்டந்தா...அவர்களோட அன்பு மழையில நனைஞ்சு ஜலதொசமே புடிச்சுக்கும்.

அந்த கிராமத்து காத்தும் மக்களோட அன்பும் அரவணைப்பும், புது புது முகங்களின் அறிமுகங்களும் அந்த பசங்களோட நம்ம பயலுவ அந்த வெயிலிலும் சுற்றி திரியும் போது நாம அவங்களிடம் கோவப்படுவதும் ..அது ஒரு புது அனுபவமா இருக்க்கும்.

பள்ளி நாட்களில் பெரும்பாலான நேரங்களை பள்ளியிலும் ஆசிரியர்களிடமும் கழித்துவிட்டு வீட்டிலேயே முழு நேரமும் இருப்பதை நினைத்து நினைத்து முதல் ஒரு வாரத்திற்கு ஒன்னரை மாத விடுமுறையை குதூகலமாக கொண்டாட செய்வார்கள். முழுக்க முழுக்க ஆசிரியர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு பெற்றோர்களின் பிடியில், தான் நினைப்பதை, கேட்பதை (பெற்றோர்கள் வாங்கிதராவிட்டாலும்) கேட்டு மிகுந்த சந்தோசமாக சொந்த பந்தங்களின் பாச பிணைப்பில் திளைக்கிறார்கள் ...

ஆனால் இப்போதுள்ள மாணவர்களுக்கெல்லாம் இதெல்லாம்   பழங்கதைகளாகவும், எட்டாக்கனியாகவும் ஆகிவிட்டது. இன்று பெரும்பாலான மக்கள் கிராமங்களிலிருந்து பிழைப்புக்கு நகரத்தை நோக்கி புலம் பெயர்வது நமக்கெலாம் வருத்தமடைய செய்யும் செயலாக இருந்தாலும் விவசாயத்தை நம்பி அவர்களால் இருக்கமுடிவதில்லை.
குறைந்தது இந்தமாதிரி விடுமுறை நாட்களிலாவது தங்கள் கிராமங்களுக்கு அழைத்து சென்று அவர்களுக்கு கிராமத்தின் வாழ்க்கையை  தெரிய வைக்கலாம்.

ஆனால் இன்றைய பெற்றோர்கள் விடுமுறை விட்ட அடுத்த நாளே தங்களோட பசங்க ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் அல்லது ஒரு தனிப்பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து தன்னோட மூளைய மேலும் வெளுக்க வேண்டும், இந்தமாதிரியான நோக்கமே இன்றைய பெரும்பாலான பெற்றோர்களிடம் காண கிடைக்கிறது. இதுல இன்னொரு கேவலமான செய்தி என்னான்னா தங்களோட பிள்ளைகள் ஒடனே கைநெறைய சம்பாதிக்கணும் அதுக்கு அவங்கள பணம் கொட்டும் எந்திரமாகவும், சுயநலவாதியாகவும், மனித நேய மற்ற மிருகமாகவும் மாற்ற அவர்களை விடுமுறை நாட்களிலும் ஓய்வின்றி தங்களோட தேவைகளை அவர்களின் மூலையில் திணிக்கிறார்கள்.

ஆண்டு விடுமுறை எதுக்கு விடறாங்க.... மாணவர்கள் தங்களுக்கு விடப்படும் இந்த விடுமுறையை பாட சுமைகளிலிருந்து விலகி வேறு நல்ல செயல்களுக்கு நேரத்தை செலவிட்டு தங்களை மனதளவிலும், உடலளவிலும் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அத விட்டுட்டு மறுபடியும் அவங்களுக்கு ஓய்வே தராம அவங்களோட சந்தோசத்த கெடுக்கறது எந்த விதத்துல நியாயம்.

இதிலவேற ஒன்பதாம்பு, பதினொன்னாவது படிக்கிற பசங்ககுக்கு இன்னும் மோசம் ஆண்டு விடுமுர விட்ட வொடனே பத்தாவது பன்னிரெண்டாவது பாடத்த ஆரம்பிச்சுடுறாங்க... அப்போதான் அந்த பள்ளி நூறு சதவிகித தேர்ச்சி பெறுமாம். வீனப்போனவனுங்க... ஆண்டு முழுவதும் படித்த மாணவர்களுக்கு விடுமுறை என்பது அவர்களுக்கு ஆனந்தத்தை தருவது . அடுத்த வேலைக்கு அவர்களை தயார்படுத்த வுதவுகிறது.இந்த விடுமுறையை மாணவர்கள் மனதில் நல்ல எண்ணங்களை விதைத்து பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள உறவை மேலும் மேலும் வளர்த்து அவர்களை தங்களுடைய அன்பினால் நெறிப்படுத்த வேண்டும் அதை விடுத்து அவர்களை இயந்திரமாக மாற்ற வேண்டாம்.

மாணவர்களும் தங்களுடைய இந்த நேரத்தை தொலைக்காட்சி, சினிமா, போன்ற வற்றில் மூழ்கி விடாமல் தங்களுடைய திறமைகளை வளர்த்தெடுக்க முயலவேண்டும். ஒய்வு நேரங்களின் நூலகங்களுக்கு போகலாம், பாட புத்தகங்கள் தவிர்த்து வேறு செய்திகளை தேடி தேடி படித்து தெரிந்து கொள்ளாலாம். இது உங்களின் போது அறிவை வளர்க்க கொடுத்த வாய்ப்பாக எண்ணிகொள்ளலாம்.

பெற்றோர்கள் தங்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை மேலும் மேலும் ஊக்க படுத்தவேண்டும்.

-யாகார்

Saturday, January 7, 2012

பத்து ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கும் கட்பீஸ் ஜவுளி வியாபாரி சங்க மருத்துவமனை

சென்னை: பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள், ஆனால் இப்போதெல்லாம் நோய் வந்தால் சேர்த்து வைத்த, சொத்து பத்தெல்லாம் பறந்து போய் விடுமோ என அஞ்சும் நிலை உருவாகியுள்ளது. அந்தளவிற்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் பகல் கொள்ளையாக உள்ள நிலையில், தமிழகத்திலேயே முதன் முறையாக கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவமனை பொதுமக்களுக்கு பத்து ரூபாயில் நோய்க்கு தீர்வு தருகின்றனர்.
சென்னை தண்டையார்பேட்டை தாண்டவராயன் தெருவில் கடந்த 2010ல் சென்னை வண்ணாரப்பேட்டை கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் பியாரிலால் ஜெயினின் உதவியுடன் ஏழைகளுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று எண்ணிய சகுந்தலா என்பவரின் பெயரில் தொடங்கப்பட்டது தான் சகுந்தலா தேவி மகப்பேறு மருத்துவமனை. இம் மருத்துவமனை ரூ. மூன்று கோடி செலவில் பலரின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டது. பெண்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளிப்பதில் பகுதி மக்களின் முதல் தேர்வாக இம்மருத்துவமனை உள்ளது.
இங்கு பிள்ளை பேறு பெறும் பெண்களுக்கு அனைத்து வித பரிசோதனைகளுடன், தேவைப்படும் பட்சத்தில் அறுவை சிகிச்சை மூலமாகவும் மிக குறைந்த செலவில் மகப்பேறு சிகிச்சை அளிக்கின்றனர்.
இன்று தலைவலி மற்றும் காய்ச்சல் வந்தால் கூட, மருத்துவரை அணுகினால் குறைந்தபட்சம் மருத்துவருக்கு நூறு ரூபாய் அழ வேண்டியிருக்கும். ஆனால் இங்கு மருத்துவ பரிசோதனைக்கு வெறும் பத்து ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், சுகப்பிரசவத்திற்கு ஆயிரம்ரூபாயாகவும், அறுவை சிகிச்சைக்கு ஆறாயிரத்து 500 ரூபாயும் கட்டணமாக பெறுகின்றனர். இந்த கட்டணங்கள் கூட, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினரின் சம்பளத் தேவைக்காக தான் வாங்கப்படுகிறது என மருத்துவமனை செயலரும், கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்க உயர்மட்டக்குழு உறுப்பினருமான மாரிமுத்து கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: மக்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று எண்ணியே இம்மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து ஓன்றரை ஆண்டாகி விட்டது. இதுவரை 827 பெண்களுக்கு சுகப்பிரசவமாகவும் அறுவைசிகிச்சை மூலமாகவும் மகப்பேறு வைத்தியம் பார்த்திருக்கிறோம்.
தினமும் வருகிற புறநோயாளிகளின் எண்ணிக்கை இதுவரை எண்பதாயிரத்தை தாண்டி விட்டது. இங்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் இ.சி.ஜி., உள்ளிட்ட மகப்பேறுக்கு தேவையான அனைத்தையும் ஒரே இடத்தில் அமைத்துள்ளோம். இம்மருத்துவமனைக்கு என்றுஇதுவரை விளம்பரம் கூட செய்தது கிடையாது. எல்லாம் மக்களின் பூரண நிம்மதியே எங்களுக்கு விளம்பரமாக அமைந்து வருகிறது. ஆந்திராவிலிருந்து கூட இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். வண்ணாரப்பேட்டை கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் இயங்கும் இம்மருத்துமனையில் பெறப்படும் குறைந்த கட்டணங்கள் கூட மருத்துவர்களின் சம்பளத் தேவைக்காக மட்டுமே வாங்கப்படுகிறது. சிகிச்சையை பொறுத்தமட்டில் மக்களுக்கு இலவசம் என்றே சொல்லலாம். தமிழகத்திலேயே ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மருத்துவமனை நடத்தப்படுவது இங்கு தான் உள்ளது என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

- நன்றி தினமலர் .

இந்த மாதிரி யான  நல்ல விஷயங்களை நாம் ஊக்குவிப்போம் !

தமிழில் வாக்கியம் அமைக்க